
டெல்லி: ஜனவரி.1-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயரும் என்று கணிக்கப்படுகிறது. குறிப்பாக ரூ.18க்கு விற்கப்படும் ஒரு சிகரெட் விலை, இனி ரூ.72க்கு விற்பனை செய்யப்படலாம் என்று தெரிய வந்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய கலால் வரி திருத்த மசோதா விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நாட்டில் தற்போது 1,000 சிகரெட்களுக்கு அதன் வகை மற்றும் நீளத்தை அடிப்படையாக கொண்டு ரூ.200 முதல் ரூ.735 வரை வரி வசூலிக்கப்படுகிறது. இந்த புதிய சட்டத்திருத்தால், இனி ஆயிரம் சிகரெட்களுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை வரிகள் விதிக்கப்படும்.இதன் காரணமாக ரூ.18க்கு விற்பனை செய்யப்படும் ஒரு சிகரெட், இனி ரூ.72க்கு விற்பனை செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் மெல்லும் புகையிலைக்கான வரி 25 சதவிகிதத்தில் இருந்து 100 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட உள்ளது. ஹுக்கா புகையிலைக்கான வரி 25 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக உயர்த்தப்பட உள்ளது. அதேபோல் புகையிலை பைப் சிகரெட்களுக்கான வரி 60ல் இருந்து 325 சதவிகிதமாக உயர்த்தப்பட உள்ளது. இந்த வரி விதிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய நிதியமைச்சகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 10 கோடி வரை சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றனர். இந்த வரி விதிப்பு அதன் எண்ணிக்கை குறைக்கும் என்று கருதப்படுகிறது. அதேபோல் தற்போதுள்ள 40 சதவிகித ஜிஎஸ்டி வரிக்கு கூடுதலாக இந்தக் கலால் வரி விதிக்கப்பட உள்ளது. இந்த வரிவிதிப்பில் 28 சதவிகித ஜிஎஸ்டி மற்றும் சிகரெட்டின் அளவைப் பொறுத்து கூடுதல் மதிப்பீட்டு வரியும் அடங்கும். இந்தியாவில் தற்போது சிகரெட் சில்லறை விலையில் சுமார் 53 சதவிகிதம் வரியாக மட்டுமே உள்ளது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் 75 சதவிகித இலக்கை விட இது குறைவு தான்.மத்திய அரசின் இந்த நடவடிக்கை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரு தரப்பு சிகரெட் பிடிப்போர் அதன் விலைக்கு பயந்தே, கொஞ்சம் கொஞ்சமாக சிகரெட் மற்றும் புகையிலை பழக்கத்தை கைவிடுவார்கள் என்று கருத்து கூறி வருகின்றனர். மறுபுறம் இது கள்ளச்சந்தைக்கு வழிவகுக்கும் என்று விமர்சித்து வருகின்றனர்.
















