
சென்னை: மே 14 –
‘நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும் கூடவா புரியவில்லை அதிகாரத்துடன் ஆட்டம் போட்ட 15 அமைச்சர்களின் தோல்வியைப் பார்த்த பிறகும் திமுக பாடம் கற்றுக்கொள்ளவில்லை’ என உதயநிதிக்கு தமிழக முதல்வர் விஜய் பதிலடி கொடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, தவெகவுக்கு எதிராக 65 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர் என்று கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தில், மக்கள் அரசு 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது.
திமுக போன்ற கட்சிகள் தவெக-வின் பெரும்பான்மை குறித்துப் பேசி வருகின்றன. ஆனால், யதார்த்தம் என்னவென்றால், கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட தவெக 34.92% வாக்குகளைப் பெற்றுள்ளது. தனிப்பட்ட முறையில் திமுக பெற்ற வாக்குகள் வெறும் 24.19% மட்டுமே.
திமுகவை விட தவெக 52,97,065 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது என்பதைத் தேர்தல் ஆணையப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. தவெக-வை 3.21 கோடி மக்கள் நிராகரித்துவிட்டதாகக் கூறும் திமுக, அதே கணக்குப்படி 3.68 கோடி மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான்.
தமிழகத்தின் 76% மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35% மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற எங்களைப் பார்த்து ஏளனமாகப் பேசுவது நகைப்புக்குரியது. மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால்தான் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் நம்மை ஆதரித்தன.
சட்டப்பேரவை நிகழ்வுகளை இருட்டடிப்பு செய்யாமல் நேரடி ஒளிபரப்பு செய்ததன் மூலம் எதையும் மறைக்காத அரசு என்பதை நிரூபித்துள்ளோம்.
நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும் கூடவா புரியவில்லை? அதிகாரத்தை வைத்து ஆட்டம்போட்ட 15 அமைச்சர்களின் தோல்வியைப் பார்த்த பிறகும் திமுக பாடம் கற்றுக்கொள்ளவில்லை.
1999-ல் பாஜகவுடன் எக்ஸ் சேஞ்ச் அரசியல் செய்த திமுக, எங்களைப் பார்த்து விமர்சிப்பது வேடிக்கை. நாங்கள் ‘சேஞ்ச்’ மற்றும் ‘சேலஞ்ச்’ இரண்டையும் நம்பி அரசியலுக்கு வந்தவர்கள். எங்கள் அரசை ‘புஷ்பா அரசு’ என ஏளனம் செய்பவர்கள், தோல்வி பயத்தில் பொறாமையால் புகை கக்குகிறார்கள்.
மேஜிக்கல் நம்பர் இல்லை என்று சொல்பவர்கள், எங்கள் அரசு செய்யப்போகும் ‘மேஜிக்’ மற்றும் ‘மிராக்கிள்’ சாதனைகளை இனிமேல் தான் பார்க்கப் போகிறார்கள். ஆர்ப்பாட்டமின்றிஅமைதியாக மக்கள் நலப்பணிகளைச் செய்து காட்டுவோம்.
மக்களே… தோல்வியில் மூழ்கியுள்ளவர்கள் நம் மீது சேற்றை வாரி இறைக்கட்டும். நாம் மக்கள் நலன், மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில் உறுதியாக இருந்து சாதனை படைப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

















