துபாய், செப்டம்பர் 9- 2025 ஆசியக் கோப்பை தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான தனது முதல் போட்டியில் இந்திய அணி களமிறங்க உள்ள நிலையில், அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஒரு பிரம்மாண்டமான வரலாற்றுச் சாதனையை செய்ய இருக்கிறார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற மைல்கல்லை எட்ட அவருக்கு இன்னும் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே தேவை. மேலும், உலக அளவில் விரைவாக 100 சர்வதேச டி20 விக்கெட்கள் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் செய்ய வாய்ப்பு உள்ளது. புதன்கிழமை (செப்டம்பர் 10) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுத் தாக்குதலை அர்ஷ்தீப் சிங் வழிநடத்த உள்ளார். இதுவரை 63 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள 26 வயதான பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர், 99 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் புதிய வரலாறு சர்வதேச டி20 அரங்கில் இதுவரை 24 பந்துவீச்சாளர்கள் 100 அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஆனால், அந்தப் பட்டியலில் ஒரு இந்திய வீரர் கூட இதுவரை இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீண்ட கால ஏக்கத்தை அர்ஷ்தீப் சிங் தனது அடுத்த போட்டியிலேயே முடிவுக்குக் கொண்டு வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்..



















