
புதுடெல்லி: டிசம்பர் 5-
போதுமான விமான ஊழியர்கள் இல்லாததால், மூன்றாவது நாளாக இண்டிகோ விமானங்கள் அதிக அளவில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இன்று காலை முதல் டெல்லியில் 225 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. அதிக அளவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். முன்பதிவு செய்த பயணிகள் டிக்கெட் பணத்தை திரும்ப பெற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
டெல்லி மட்டுமல்லாது பெங்களூர், சென்னை என நாட்டின் பல்வேறு விமான நிலையங்களிலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இன்று, 52 வருகை, 50 புறப்பாடு என மொத்தம் 102 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
எவ்வளவு விமானங்கள் ரத்து? அடுத்த 2-3 நாட்களுக்கு இந்த பிரச்சனை தொடரும் என விமான நிறுவனம் தெரிவித்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 550 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. நேற்று பெங்களூரில் மட்டும் சுமார் 99 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. வழக்கமாக 100% சரியான நேரத்தை பின்பற்றும் இண்டிகோ விமான நிறுவனம் புதன்கிழமையன்று வெறும் 19.7% அளவுக்கு மட்டுமே சரியான நேரத்தை பின்பற்றியது. கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி இன்று வரை மொத்தம் 1,000க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பிரச்சனை என்ன? விமான விபத்துக்களை தவிர்க்க விதிமுறைகளை டைட் செய்ய வேண்டும் என்று சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், சிவில் விமான போக்குவரத்து துறையானது, புதிய விதிமுறைகளை வகுத்திருந்தது. இந்த விதிமுறைகளின்படிதான் இனி விமான ஊழியர்களை வேலை வாங்க முடியும். எனவே இதன் அடிப்படையில் ஷிப்ட் ரோஸ்டர்களை போட உத்தரவிட்டது. முன்பு ஒரு விமானி தொடர்ச்சியாக 18 மணி நேரம் வரை பறக்கலாம் என்று விதி இருந்தது. ஆனால், இந்த விதியை தற்போது 8 மணி நேரமாக குறைக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல இரவு நேரங்களில் 6 முறை விமானங்களை லேண்ட் செய்யலாம் என்று பழைய விதிமுறை தெரிவித்திருந்தது. புதிய விதிமுறையின்படி 2 முறை மட்டுமே விமானங்களை லேண்ட் செய்ய முடியும். மட்டுமல்லாது முன்பு, வாரத்தில் 36 மணி நேரம் மட்டும் விடுப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விடுப்பு தற்போது 48 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் தொடர்ந்து வழங்க வேண்டும். அதாவது 2 நாட்கள் கட்டாயமாக விமானிக்கும், விமான பணியாளர்களுக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என்று புதிய விதி கூறுகிறது.
காலம் தாழ்த்திய இண்டிகோ புதிய விதிகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது கடுமையான அபராதங்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை பாயும். இந்த விதிகள் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு மட்டுமே பொருந்தும். இந்த விதிகளை அமல்படுத்த விமான நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. நவ.1 என்பது இறுதி நாளாகும். எனவே ஏர் இந்தியா, ஆகாசா ஏர் மற்றும் ஸ்பைஸ் ஜெட் போன்ற நிறுவனங்கள் சிறப்பாக இந்த காலத்தை பயன்படுத்தி, கூடுதலாக ஆட்களை நியமித்து தப்பித்துக்கொண்டன. இண்டிகோ நிறுவனம் இவ்வளவு காலம் அவகாசம் வழங்கியும், கூடுதலாக ஆட்களை எடுக்காமல் காலத்தை தாழ்த்தி வந்ததே தற்போது இந்த சிக்கலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.


















