
ராமேஸ்வரம்: பிப்ரவரி 27-
இன்றைய தினம் (பிப்ரவரி 27ம் தேதி) கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழா தொடங்குகிறது. கச்சத்தீவில் உள்ள தேவாலயத்தில் இதைக் கொண்டாடத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா, இலங்கையைச் சேர்ந்த 8000க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் இருக்கிறது புனித அந்தோணியார் தேவாலயம்.. இந்தத் தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழா கொண்டாடப்படும். இதில் இரு நாட்டு மீனவர்களும் பெருவாரியாகக் கலந்து கொள்வார்கள்.
இந்தாண்டு இன்றும் நாளையும் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ராமேசுவரம் பரிபாலனுக்கு யாழ்ப்பாணம் முதன்மை குரு அழைப்பிதழ் அனுப்பினார். இதில் பங்கேற்க ராமேஸ்வரத்திலிருந்து 92 விசைப்படகுகள், 26 நாட்டுப் படகுகளில் மீனவர்கள் கச்சத்தீவுக்குச் செல்கிறார்கள். மொத்தம் 3,996 பேர் கச்சத்தீவுக்குச் செல்லப் பதிவு செய்தனர். படகு உரிமையாளா்கள் மூலம் இவர்களுக்குப் பயண அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. சுங்கத் துறை சோதனைக்குப் பின் காலை ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் கச்சத்தீவு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.. வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குப் புனித அந்தோணியார் ஆலயம் முன்பு கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா ஆரம்பிக்கும். அதன் பிறகு சிலுவைப் பாதையும், சிறப்புத் திருப்பலியும் நடைபெறும். பிறகு இரவு புனித அந்தோணியார் தேர் பவனியும் நடக்கவுள்ளது
ரண்டாவது நாளாக நாளை சனிக்கிழமை காலை 7 மணிக்குச் சிறப்புத் திருப்பலிகள் நடைபெறும். தமிழ், சிங்கள மொழிகளில் இது நடத்தப்படும். அதைத் தொடர்ந்து கூட்டுப் பிரார்த்தனைக்குப் பிறகு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. அதன் பிறகு உடனடியாகக் காலை 10 மணிக்குக் கச்சத்தீவிலிருந்து அனைத்து விசைப்படகுகளும் மாலை 5 மணிக்குள் ராமேஸ்வரம் திரும்பும். புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை யாழ்ப்பாணம் நிர்வாகம் செய்துள்ளது.


















