
சென்னை: ஆக. 30- இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க டில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து காலியான ஆறு எம்.பி., பதவிகளுக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதில், அ.தி.மு.க., பெயரில் பழனிசாமி வழங்கிய விண்ணப்பங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என கடிதம் கொடுத்திருந்தேன். டில்லி உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கை காரணம் காட்டி, அந்த கடிதத்தை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை. எனவே தேர்தல் ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் தொடர்ந்தார் இந்த மனு, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி அமித் சர்மா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகழேந்தி தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்..