புதுடில்லி: டிசம்பர் 3-
புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு காலாவதியான நிவாரணப் பொருட்களை பாகிஸ்தான் அனுப்பியுள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.டிட்வா புயலால் இலங்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 330-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இலங்கைக்கு இந்தியா சார்பில் நிவாரணப் பொருட்கள் விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் எக்ஸ் வலைதளத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டது. அதில், ‘‘பாகிஸ்தானில் இருந்து வந்த நிவாரணப் பொருட்கள், இலங்கையில் புயலால் பாதிக்கப்பட்ட நமது சகோதர, சகோதரிகளுக்கு வெற்றிகரமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த உதவி இலங்கைக்கு பாகிஸ்தானின் ஆதரவு எப்போதும் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது’’ என்று கூறப்பட்டிருந்தது. அத்துடன், நிவாரணப் பொருட்களின் புகைப்படங்களையும் வெளியிட்டது.
ஆனால், சமூக வலைதளவாசிகள் பலர் அந்த நிவாரணப் பொருட்களில் உள்ள ‘எக்ஸ்பையரி டேட்’டை கவனித்துள்ளனர். அதில், நிவாரணப் பொருட்களின் பாக்கெட்டுகளில் ‘அக்டோபர் 2024’ என்று அச்சிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே காலாவதியான பொருட்களை நிவாரணம் என்ற பெயரில் இலங்கைக்கு பாகிஸ்தான் அனுப்பியுள்ளது என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

















