ராமேசுவரம்: செப். 3- கச்சத்தீவு இலங்கைக்குரியது, அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் கூறியுள்ளதற்கு, அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த பின்னர், கடந்த 51 ஆண்டுகளில் முதன்முறையாக இலங்கை அதிபர் கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.யாழ்ப்பாணம் மண்டை தீவில் புதிதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க, பின்னர் மண்டைத்தீவு, நயினாத் தீவு மற்றும் கச்சத்தீவுகளுக்குச் சென்று பார்வையிட்டார்.இது தொடர்பாக இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அதிபர் அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் உள்ள கச்சத்தீவுக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். அப்போது இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே ஆகியோர் உடனிருந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க “கச்சத்தீவு இலங்கைக்குரியது, அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது” – என்று தெரிவித்திருந்தார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பான இலங்கை அதிபரின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தவாக தலைவர் த.வேல்முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


















