
கொழும்பு, பிப். 27- 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்தியாவுடன் இணைந்து நடத்தும் நாடான இலங்கை அணி, சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தத் தோல்வி அந்த அணி நிர்வாகத்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் கேப்டன் தசுன் ஷனகா மற்றும் தேர்வுக்குழுவினரை அதிரடியாக நீக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர் தோல்விகள் இத்தொடரின் ஆரம்பத்தில் இலங்கை அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது. லீக் சுற்றில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பதிவு செய்து வலுவான நிலையில் இருந்தது. ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இருந்தது. ஆனால், சூப்பர் 8 சுற்றுக்கு வந்ததும் நிலைமை தலைகீழாக மாறியது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான மிக முக்கியமான போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியதால், அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இலங்கை அணி இழந்தது. குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிராக 147 ரன்களையும், நியூசிலாந்துக்கு எதிராக 169 ரன்களையும் துரத்த முடியாமல் இலங்கையின் பேட்டிங் வரிசை சரிந்தது தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அதேசமயம், அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களான சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா ஆகியோர் காயம் காரணமாக விலகியது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து இலங்கை அணியில் முழுமையான மாற்றங்களைச் செய்ய வாரியம் திட்டமிட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் கேப்டன் தசுன் ஷனகா மற்றும் தேர்வுக் குழுவினர் பதவி விலகலாம் அல்லது நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சரித் அசலங்கா நீக்கப்பட்ட பிறகு கேப்டனாகப் பொறுப்பேற்ற ஷனகா, அணியை உலகக்கோப்பை அரையிறுதி வரை வழிநடத்தத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


















