கோவை: நவம்பர் 11-
கோவையில் டேட்டிங் ஆப் ஆன பம்பிள் ஆப் மூலம் பழகிய இளம்பெண்ணிடம் இருவர் நகை மற்றும் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் டிஎஸ்பி மகன் தருண் என்பவரை கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்தனர். கோவை ஏர்போர்ட் அருகே கடந்த நவம்பர் 2 ஆம் தேதி 3 பேர் கொண்ட போதை கும்பலால் காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. அதே நாளில் கோவையில் மற்றொரு அதிர்ச்சி தரும் சம்பவமும் நடைபெற்றது.
கோவையில் உள்ள ஒரு ஹாஸ்டலில் 25 வயது பெண் ஒருவர் தங்கி பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு பம்பிள் ஆப் எனும் டேட்டிங் ஆப் மூலமாக ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தருண் என்ற 28 வயதான இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பழகி வந்த நிலையில், கடந்த 2 ஆம் தேதி தருண் அந்த இளம்பெண்ணை தன்னுடைய எஸ்யூவி காரில் கோவை, காகாசாவடி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் செல்லும் வழியிலேயே அந்த காரில் தருணின் நண்பரான 28 வயதான தனுஷ் என்ற இளைஞரும் காரில் ஏறியுள்ளார். அப்போது, திடீரென போட்டோ எடுத்துவிட்டு அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளனர். இளம்பெண் அணிந்திருந்த செயின், மோதிரம் உள்ளிட்ட 3 பவுன் நகைகளைப் பறித்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் யுபிஐ பரிவர்த்தனை மூலமாக ரூ. 90 ஆயிரத்தையும் பறித்துள்ளனர். இதனால், அந்தப் பெண் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

















