
பெங்களூரு:பிப். .23- டெல்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆடையை களைந்து போராட்டம் நடத்தியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மார்கரெட் ஆல்வா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மார்கரெட் ஆல்வா, ‘‘சர்வதேச நிகழ்வுகளின்போது கண்ணியம் காக்கப்பட வேண்டும், ஒழுக்கம் பராமரிக்கப்பட வேண்டும், பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். ஆடையை களைந்து போராட்டம்: டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் கடந்த 20-ம் தேதி இளைஞர் காங்கிரஸை சேர்ந்த சிலர் அரங்கம் 5-ல் திடீரென நுழைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட டி சர்ட்களை அவர்கள் அணிந்திருந்தனர். அந்த டி சர்ட்களில், இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் பைல் உள்ளிட்ட வாசகங்கள் இருந்தன. திடீரென இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் டி சர்ட்டை களைந்து பிரதமர் மோடிக்கு எதிராகவும் இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராகவும் கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகளில் கிருஷ்ணா ஹரி, குந்தன் யாதவ், அஜய் குமார், நரசிம்ம யாதவ் ஆகிய 4 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவர்களை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 5-வது நபர் கைது: ஆடைகளை களைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், 5வது நபர் இன்று கைது செய்யப்பட்டார். ஜிதேந்திர யாதவ் என்ற அந்த நபரை மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கிருஷ்ணா ஹரியின் காரில் இருந்து போராட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்ட டி சர்ட்டுகள் மற்றும் போஸ்டர்களை கைப்பற்றி உள்ளதாக தெரிவித்த போலீஸார், மேலும் ஒரு காங்கிரஸ் நிர்வாகி பிடிபட்டுள்ளார் எனக் கூறினர்.















