நெல்லை டிச. 21-
ஊராட்சி கவுன்சிலர் கொலைக்கு பழிக்குப் பழியாக நெல்லை நீதிமன்றம் முன்பு இளைஞரை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 5 பேர் போலீஸாரிடம் சரணடைந்துள்ளனர்.நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் நீதிமன்ற வாயிலில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். இந்நிலையில், நேற்று காலை நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்து 7 பேர் கொண்ட கும்பல், ஒருவரை விரட்டிக் கொண்டு வந்தது. அவர் நீதிமன்ற வாயில் வழியாக தப்பியோட முயன்றார். நீதிமன்றம் முன்பு அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய அந்த கும்பல், அங்கிருந்து காரில் தப்பிவிட்டது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர்கள், பொதுமக்கள் சிதறி ஓடினர். தொடர்ந்து, நீதிமன்ற வாயிலில் கூடிய வழக்கறிஞர்கள், காவல் துறைக்கு எதிராக கோஷமெழுப்பினர். நீதிமன்றத்திலேயே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.தொடர்ந்து, மாநகர காவல் துணை ஆணையர் விஜயகுமார் மற்றும் போலீஸார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்டவர் கீழநத்தம் மேலூர் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி (38) என்பதும், கீழநத்தம் ஊராட்சி வார்டு உறுப்பினர் ராஜாமணி கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. கொலை முயற்சி வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. எனவே, ராஜாமணி கொலை சம்பவத்துக்கு பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து பாளையங்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து காவல் ஆணையர் ரூபேஷ்குமார் மீனா கூறும்போது, “கொலை சம்பவம் தொடர்பாக கீழநத்தம் கீழூரைச் சேர்ந்த இருதயராஜ் என்ற ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் சுரேஷ், மனோஜ், சிவா, தங்கமகேஷ், மனோராஜ் ஆகியோர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற வாயிலில் பாதுகாப்பு குளறுபடி குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்” என்றார்.