
வாஷிங்டன்: ஏப்ரல் 22-
பாகிஸ்தானில் இன்று திட்டமிட்டு இருந்த அமெரிக்கா – ஈரான் மத்தியிலான பேச்சுவார்த்தையில் ஈரான் தரப்பில் கலந்துக்கொள்ளப்படாது என அறிவித்த நிலையில் இக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதேவேளையில் புதன்கிழமையுடன் அமெரிக்கா ஈரான் மீதான போர் நிறுத்தும் நிறைவு பெறும் நிலையில் டிரம்ப்-ன் அடுத்தக்கட்ட ஆக்ஷன் என்ன என்பது தான் அனைவரின் கேள்வியாக இருந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஈரான் உடனான போர் நிறுத்தத்தை காலக்கெடு இன்றி நீட்டிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்தார்.
ஆனால் இந்த முடிவுக்கு பின்னால் மிகப்பெரிய காரணம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், அமெரிக்காவிடம் ஆயுத இருப்பு பெரிய அளவில் குறைந்துள்ளதால் ஈரான் உடன் போர் தொடர்ந்தால் அமெரிக்கா சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடனான அமெரிக்காவின் 7 வார போரில், அமெரிக்க ராணுவம் அதிகளவிலான ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளது. அமெரிக்கா வெனிசுலா போல் எளிதாக ஒரிரு வாரத்தில் ஈரானை இஸ்ரேல் துணையுடன் கைப்பற்றிவிடலாம் என திட்டமிட்டது.
ஆனால் ஈரான் தனது ட்ரோன் தாக்குதல் மூலம் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளையும் அலறவிட்டது. அமெரிக்காவும், வளைகுடா நாடுகளும் ஈரானின் இந்த 25000 டாலர் ட்ரோன்களை தடுக்க பல மில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகணைகளை பயன்படுத்தி வந்தது. இதனால் பொருளாதார ரீதியாகவும் பெரும் நெருக்கடியை சந்திக்கும் நிலை அமெரிக்காவுக்கு உருவாகியுள்ளது. அமெரிக்கா கடந்த 4-5 வருடங்களாக உக்ரைன் நாட்டுக்கு தொடர்ந்து ஆயுதம் சப்ளை செய்து வருவதும் ஏவுகணை இருப்பு குறைய முக்கிய காரணமாக உள்ளது.



















