ஈரான் மீது சீற்றத்துடன் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் – நிலவரமும் பின்னணியும் என்ன?

தெஹ்ரான், மார்ச் 1- ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து சீற்றத்துடன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணைகள் தயாரிக்கும் திட்டத்தை தடுப்பது தொடர்பாக அமெரிக்காவும், ஈரானும் மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இந்த கூட்டுத் தாக்குதலில் இறங்கியுள்ளன.ஏற்கெனவே ஈரான் மீது இந்த இரு நாடுகளும் 12 நாட்கள் தாக்குதல் நடத்தின. அது முடிந்து 8 மாதங்கள் ஆன நிலையில், மீண்டுமொரு தாக்குதல் தொடங்கியுள்ளது. இந்த முறை இன்னும் ஆக்ரோஷமாக. ஆனால், ஈரானும் சற்றும் சளைக்காமல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு இஸ்ரேலை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இரு தரப்பிலும் தாக்குதலால் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. இருப்பினும், அண்மைத் தகவலின்படி தெற்கு ஈரானில் பெண்கள் பள்ளியில் ஏவுகணை விழுந்ததில் மாணவிகள் உள்பட 40 பேர் உயிரிழந்ததாக ஈரான் தேசிய ஊடகக் குறிப்பு தெரிவிக்கின்றது. ஈரானில் இதுவரை… இந்திய நேரப்படி இன்று காலை 6.27 மணிக்கு ஈரானின் ஃபர்ஸ் செய்தி நிறுவனம் ஒரு செய்தி வெளியிட்டது. அதில், தலைநகர் தெஹ்ரானில் பல இடங்களில் தொடர் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவித்தது. அடுத்தடுத்த மணி நேரங்களில் ஈரானில் ஆங்காங்கே தாக்குதல்களால் விண்ணை முட்டும் அளவுக்கு கிளம்பும் புகை கொண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அந்த வேளையில் இஸ்ரேல் முதன்முறையாக அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டது. ‘ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது’ என்று இஸ்ரேல் ராணுவம் கூறியது.இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ஈரான் மீதான தாக்குதலை உறுதி செய்து ஒரு வீடியோப் பதிவை வெளியிட்டார். அதில் அவர், “ஈரானின் புரட்சிகர இஸ்லாமியப் படையினருக்கும், ஆயுதப் படைகளுக்கும், காவல் துறைக்கும், நான் இன்றிரவு ஓர் எச்சரிக்கையை விடுக்கிறேன். உங்கள் ஆயுதங்களைத் துறந்து சரணடையுங்கள்… உங்கள் மீதான நடவடிக்கைகள் நிறுத்தப்படும். இல்லாவிட்டால், உறுதியாக மரணத்தை எதிர்கொள்வீர்கள்” என எச்சரித்துள்ளார். மேலும், “இந்தத் தாக்குதல், ஈரான் தனது அணுசக்தி மையங்களில் மீள்கட்டமைப்பு செய்வதை தடுக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டுள்ளது. அமெரிக்கர்களுக்கான அச்சுறுத்தல்களை துடைத்தெறியும் தாக்குதல் இது. ஈரான் மீள் கட்டமைக்கும் அணு ஆயுதங்களை அழிப்பதே எங்களின் திட்டம். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க அமெரிக்க ஒருபோதும் அனுமதிக்காது” என்று கூறியுள்ளார்.