
சென்னை: மார்ச் 1-
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெரும்பாலான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சனிக்கிழமை ஆறு, ஞாயிற்றுக்கிழமை ஒன்பது என மொத்தம் 15 புறப்படும் சேவைகள் ரத்தாகின. இதனால் பயணிகள் விமான நிலையத்தில் தவிப்புக்குள்ளானார்கள். துபாய், அபுதாபி, தோஹா போன்ற வழித்தடங்கள் இதில் அடங்கும்.
பஹ்ரைன், துபாய், அபுதாபியிலிருந்து சென்னைக்கு இரவு 8 மணி முதல் 8.40 மணிக்குள் வரவிருந்த மூன்று விமானங்களும் ரத்தாகின. மேலும், பிற்பகல் 2.20 மணிக்கு மஸ்கட்டிற்கு புறப்பட்ட ஓமன் ஏர் விமானம், மத்திய கிழக்கு வான்வெளி கட்டுப்பாடுகளால் சென்னைக்கே திருப்பி அனுப்பப்பட்டு, பின்னர் அந்தச் சேவையும் ரத்தானது. சனிக்கிழமை ரத்து செய்யப்பட்ட சேவைகளில், மாலை 4.10 மணிக்கு அபுதாபிக்குச் செல்லவிருந்த கத்தார் ஏர்வேஸ், இரவு 9.40 மணிக்கு அபுதாபிக்குச் செல்லவிருந்த எடிஹாட் ஏர்வேஸ், இரவு 9.45 மணிக்கு துபாய்க்குச் செல்லவிருந்த எமிரேட்ஸ் (முதலில் ஒத்திவைக்கப்பட்டு பிறகு ரத்து) ஆகியவை இடம்பெற்றன. முக்கிய இந்திய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ, மத்திய கிழக்குக்கான விமானச் சேவைகளை ரத்து செய்வதாக உடனடி அறிவிப்பு வெளியிட்டன. சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு சென்னையிலிருந்து துபாய்க்குச் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானமும் ரத்துசெய்யப்பட்டது.

















