உச்ச நீதிமன்றத்தில் விஜய் கட்சி முறையீடு

புதுடெல்லி அக்டோபர்.8-
41 உயிர்களைப் பலிகொண்ட கரூர் கூட்ட நெரிசல் குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயாதீன விசாரணை நடத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) நியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அக்கட்சி எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கில் காவல்துறை விசாரணை மற்றும் அதிகாரிகளின் பங்கு குறித்து முன்னர் கேள்வி எழுப்பிய போதிலும், மாநில காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை உயர்நீதிமன்றம் அமைத்ததாகவும், சிறப்பு விசாரணைக் குழு கட்சிக்கு எதிராக பாரபட்சமாக இருப்பதாகவும் தமிழக வெற்றி கழகம் தனது மனுவில் வாதிட்டது.
கட்சித் தலைவர் விஜய் “சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்” என்றும், கட்சி வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்ட நீதிமன்றத்தின் தேவையற்ற கருத்துக்கள் ஏற்கனவே விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கரூரில் நடந்த விஜய் கூட்டத்தில் பிரச்சனையை உருவாக்க குற்றவாளிகளால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தை நிராகரிக்க முடியாது என்றும் குற்றம் சாட்டியது.
கரூர் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை விசாரிக்க, ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி, உச்சநீதிமன்றத்தை தவெக நாடியுள்ளது. நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரியிருப்பதால், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறது.
கடந்த 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். விஜய்யை பார்க்க அதிக அளவில் மக்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு சீனா உட்பட இரங்கல் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சம்பவம் குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. தவெகவினர், திமுக மீது பழியை தூக்கி போட்டனர். நெரிசல் பலியில் சந்தேகம் இருப்பதாகவும் அவர்கள் கூறியிருந்தனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதேபோல கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோரியும், அதற்கான விதிகளை வகுக்கக்கோரியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தவெக மீதும் விஜய் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரசுக்கு கேள்விகளை எழுப்பியிருந்தது.
மட்டுமல்லாது ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் புலனாய்வு குழுவையும் அமைத்து உத்தரவிட்டிருந்தது. இந்த குழு, விசாரணையை தொடங்கியுள்ளது. கரூரில் நெரிசல் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்த காவலர்களிடம் முதல்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த குழுவில் புதியதாக சில அதிகாரிகள் இணைக்கப்பட்டிருக்கின்றனர். விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தவெக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறது.