
ஐதராபாத், பிப். 20- ஐதராபாத் பிரியாணி உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனை மூலம் இந்தியா முழுவதும் ரூ.70,000 கோடி வரி ஏய்ப்பு மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பிரியாணி உணவகங்களில் அதிகாரிகள் வழக்கமான சோதனை நடத்தினார்கள். அப்போது பல லட்சக்கணக்கான பில்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய ஏஐ வசதியை பயன்படுத்தினர். அப்போது பல உணவகங்கள் உண்மையான வருவாயை மறைக்க பில்லிங் மென்பொருளை கையாண்டது தெரிய வந்தது. இதன் மூலம் அழிக்கப்பட்ட பில்களை ஏஐ கண்டுபிடித்துக்கொடுத்தது. இதன் மூலம் பல உணவகங்கள் அதிக வருவாய் பெற்றதும், ஆனால் அவர்கள் மிகக் குறைவாக கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய உணவகங்களில் இந்த சோதனையை நடத்தினர். இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளில் சுமார் ரூ.70,000 கோடி வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பில்கள் தயாரிக்க உணவகங்கள் பயன்படுத்தும் ஒரு பெரிய கணினி அமைப்பைப் ஏஐ மூலம் படிப்பதன் மூலம் இந்த கண்டுபிடிப்பு செய்யப்பட்டது. இந்த பில்லிங் மென்பொருளை நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் பயன்படுத்துகின்றன. கணினி கருவிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அதிகாரிகள் கிட்டத்தட்ட 1.77 லட்சம் உணவகங்களின் பில் பதிவுகளைச் சரிபார்த்து, சுமார் 60 டெராபைட் தரவை ஆய்வு செய்தனர். வாடிக்கையாளர்கள் பணம் செலுத்திய பிறகு, பல பில்கள் அமைதியாக நீக்கப்பட்டன அல்லது அமைப்புக்குள் மாற்றப்பட்டன என்பதை அவர்கள் கண்டறிந்தனர். தடயவியல் தரவு பகுப்பாய்வு மற்றும் ஏஐ கருவிகள் மூலமாக நடத்தப்பட்ட இந்த விசாரணையில் கடந்த 2019-2020ம் நிதியாண்டில் இந்த உணவகங்கள் குறைந்தது ரூ.70ஆயிரம் கோடி மதிப்புள்ள விற்பனையை மறைத்துள்ளது கண்டறியப்பட்டது. மறைக்கப்பட்ட வருமானத்திற்கான வரி மற்றும் அபராதத்தை அதிகாரிகள் இன்னும் கணக்கிடவில்லை. இந்த மென்பொருள் மூலம் இந்தியா முழுவதும் சுமார் ரூ.13317 கோடி மதிப்பிலான செலுத்தப்பட்ட பில்களின் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. இதில் ஆந்திரா, தெலங்கானாவில் மட்டும் ரூ.5100 கோடி பில் பதிவு நீக்கப்பட்டுள்ளது.















