
தஞ்சாவூர்: பிப்ரவரி 16-
மோடி – அமித்ஷா பருப்பு வட மாநிலங்களில் வேகலாம். தமிழ்நாட்டில் வேகாது என்றும், 2026 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டிற்கும் – டெல்லிக்கும் இடையே.. சமூக நீதிக்கும் – சமூக அநீதிக்கும் இடையே.. தமிழ் மொழிக்கும் இந்தி திணிப்புக்கும் இடையே நடக்கும் தேர்தல் என திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு இளைஞரணி செயலாளரும் – துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளை சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,” தி.மு.க. இளைஞரணியில் 5 லட்சம் பேர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் எந்த அரசியல் கட்சி சார்பு அணிக்கும் இப்படிப் வலிமையான கட்டமைப்பு கிடையாது. இன்று பல கட்சிகள் பூத் கமிட்டி அமைக்க ஆள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றன.
திராவிட மாடல் அரசின் திட்டங்களை ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்த்து பாராட்டி வருகிறது. மீண்டும் தமிழகத்தில் அமையப் போவது தி.மு.க. 2.0 அரசு தான். அப்போது மகளிருக்கான உரிமைத்தொகையை ஆயிரத்தில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவேன் என முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி அளித்துள்ளார். இதனால், ஒட்டுமொத்த சங்கி கூட்டமும், அடிமை கூட்டமும் கதறிக் கொண்டிருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தல் வரவுள்ளதால் அடிக்கடி சங்கி கூட்டம் வரும். மோடி, அமித்ஷா அடிக்கடி வருவார்கள். ஆனால், தமிழகத்திற்கு தேவையான நிதி மட்டும் வராது.
உத்தரபிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் மோடி, அமித்ஷாவின் பருப்பு வேகலாம். ஆனால் தமிழகத்தில், ஒருபோதும் வேகாது. பா.ஜ.க – அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்துள்ள தலைவர்களை, யோசித்து பாருங்கள். பழனிசாமியுடன் கூட்டணியில் இருப்பதற்கு தூக்கில் தொங்கி விடலாம் என ஒருவர் கூறினார். பழனிசாமிக்கு எந்த அருகதையும் கிடையாது. கவுன்சிலராக வருவதற்குக் கூட தகுதி கிடையாது, “டயர் நக்கி” என ஒருவர் கூறினார். இந்த நிலையில் தமிழகத்திற்கு, டபுள் இன்ஜின் சர்க்கார் வேண்டும் என பிரதமர் மோடி கூறுகிறார். பிரதமர் மோடி, உங்கள் கூட்டணி வண்டியை பாருங்கள், கூட்டணியில் உள்ள அனைவரும் பஞ்சரான டயர்கள்.
உங்களுடைய பஞ்சரான டயர்களும், ஃபங்ஷன் ஆகாத டப்பா இன்ஜினும் தமிழ்நாட்டில் என்றைக்கும் ஓடவே ஓடாது. இன்னொரு பக்கம் யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் ஒரு கோஷ்டி சுற்றிக்கொண்டிருக்கிறது. கொள்கை, லட்சியம், கோட்பாடு எதுவும் இல்லாமலும் தெரியாமலும் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அரசியல் ஒரு என்டர்டெயின்மென்ட் என்று நினைத்துக்கொண்டுள்ளனர். அரசியல் என்பது மக்கள் பணி; அது ஒரு கமிட்மெண்ட், டெடிகேஷன் என்பதை தி.மு.க.வினர் காட்ட வேண்டும். கமிட்மெண்ட், டெடிகேஷன் இல்லாமல் யாராலும் சாதிக்க முடியாது.















