உலகக்கோப்பை வெற்றிக்கு பிரதமர் மோடி, சச்சின் வாழ்த்து

மும்பை, நவ. 3- இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2025 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த தேசமும் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முதல் சச்சின் டெண்டுல்கர், நீரஜ் சோப்ரா வரை அனைவரும் இந்திய அணிக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு அடுத்து, உலகக்கோப்பையை வென்ற நான்காவது அணி என்ற பெருமையைப் பெற்றது. மேலும், இதுவே இந்திய மகளிர் அணியின் முதல் உலகக்கோப்பை ஆகும். இந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் குவித்தது. இது உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும். ஷஃபாலி வர்மா 87 ரன்களுடனும், தீப்தி ஷர்மா 55 ரன்களுடனும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஸ்மிருதி மந்தனா 45 ரன்கள் எடுத்து, இந்தத் தொடரில் மொத்தமாக 434 ரன்கள் குவித்துச் சாதனை படைத்தார். அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி, கேப்டன் லாரா வோல்வார்ட்டின் (101) அபாரமான சதத்தால் போராடியது. ஆனால், தீப்தி ஷர்மாவின் ஆல்-ரவுண்ட் திறமை (5/39) மற்றும் ஷஃபாலி வர்மாவின் முக்கியமான இரண்டு விக்கெட்டுகள் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தன. ”ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அற்புதமான வெற்றி. இறுதிப் போட்டியில் அவர்களின் ஆட்டம், சிறந்த திறமையையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தியது. இந்தத் தொடர் முழுவதும் குழுப்பணி மற்றும் விடாமுயற்சியைக் காட்டியது. நமது வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்று வெற்றி, எதிர்கால சாம்பியன்களை விளையாட்டை நோக்கி ஊக்குவிக்கும்.” ”நமது வீராங்கனைகள் வரலாறு படைத்துள்ளனர். இத்தனை ஆண்டுகால கடின உழைப்பு இறுதியாகப் பலனளித்ததைக் காணும்போது, ஒரு இந்தியனாக நான் மிகவும் பெருமையடைகிறேன். அவர்கள் அனைத்துப் பாராட்டுகளுக்கும் தகுதியானவர்கள்.