உலக சாதனை படைத்த ரஷித் கான்

ஷார்ஜா, செப்டம்பர் 2- ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சு மந்திரவாதி ரஷித் கான், சர்வதேச டி20 கிரிக்கெட் அரங்கில் புதிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான முத்தரப்புத் தொடரின்போது 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்தார்.
ஷார்ஜாவில் திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில், ஐக்கிய அரபு அமீரக அணியை ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் அபாரமாகப் பந்துவீசிய கேப்டன் ரஷித் கான், 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதன் மூலம், சர்வதேச டி20 அரங்கில் அவரது மொத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்தது. இதன்மூலம், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தியின் (164 விக்கெட்டுகள்) சாதனையை முறியடித்து, முதலிடத்தைப் பிடித்து வரலாறு படைத்தார். வெறும் 98 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம்,
அதிவேகமாக இந்தச் சாதனையை நிகழ்த்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். டி20 கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த கிங்! சர்வதேசப் போட்டிகளில் மட்டுமல்லாது,
ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டிலும் (லீக் போட்டிகள் உட்பட) ரஷித் கான் தான் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராகத் திகழ்கிறார். அவர் இதுவரை 488 போட்டிகளில் விளையாடி 661 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக டுவைன் பிராவோ (631), சுனில் நரைன் (591) ஆகியோர் உள்ளனர். ஆப்கானிஸ்தான் அபார வெற்றி! ரஷித் கான் சாதனை படைத்த அதே சமயம், இந்தப் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.