
டெல்லி : பிப்ரவரி 21-
அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நம்மிடம் அதிக வரியை வசூல் செய்கின்றன, ஆனால் அமெரிக்கா அந்த நாட்டின் பொருட்களுக்கு குறைந்த வரி தான் விதிக்கிறது எனவே நான் போட்டி வரி விதிக்க போகிறேன் என கூறினார்.
டிரம்பின் இந்த போட்டி வரி விதிப்பால் உலகப் பொருளாதாரமே நிலையற்ற தன்மைக்கு சென்றது. குறிப்பாக நட்பு நாடு, நட்பு நாடு எனக் கூறி இந்திய பொருள்களுக்கு 50 சதவீத வரியை விதித்தார். இதனால் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த ஜவுளி, தோல் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து ஓராண்டு காலமாக இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன. இதன் மூலம் இந்திய பொருட்களுக்கான வரி விதிப்பு 18%ஆக குறைய உள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தம் பெரிய நிவாரணம் தருவதாக ஏற்றுமதியாளர்கள் கொண்டாடினர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் பல்வேறு நாடுகளுக்கும் விதித்த போட்டி வரி செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இது தான் உலகம் முழுவதுமே பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இது மாறி இருக்கிறது.
அமெரிக்க உச்ச நீதிமன்றம் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அறிவித்த போட்டி வரிகளை ரத்து செய்து இருக்கிறது. இது தொடர்பான வழக்கில் 6க்கு 3 என்ற விகிதத்தில் டிரம்ப் தன்னுடைய அதிகாரத்தை மீறி உள்ளார் என குறிப்பிட்டு நீதிபதிகள் இந்த வரி விதிப்பை தள்ளுபடி செய்தனர்.
இதனால் டிரம்ப் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார்.
உச்சிக்கே கொண்டு சென்றிருக்கிறது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், தற்காலிக நடவடிக்கையாக அனைத்து நாடுகளுக்கும் ஏற்கனவே உள்ள வரியோடு சேர்த்து கூடுதலாக 10% வரியை விதித்துள்ளார்.
உலக நாடுகளுக்கான கூடுதல் 10% வரி தற்காலிகமாக செயல்பாட்டில் இருக்கும் என்றும் புதிய உத்தரவு வரும் வரை இது பொருந்தும் என்றும் டிரம்ப் விளக்கம் தந்துள்ளார்.
பிப்ரவரி 24ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருவதாக அறிவித்தார். அப்படி என்றால் இந்திய பொருட்களுக்கு தற்போது எவ்வளவு வரி என்ற கேள்வி எழுகிறது. அண்மையில் தான் இரு நாடுகளுக்கும் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இந்திய பொருட்களுக்கான வரி 18% என குறைக்கப்பட்டது. இந்நிலையில் கூடுதல் 10% வரி இந்தியாவுக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்ததாக மிண்ட் தளம் வெளியிட்டுள்ள செய்தியில் தற்போதுள்ள 18% வரியுடன் கூடுதலாக 10% என இந்தியா 28% வரியை செலுத்தியாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மீண்டும் நெருக்கடியை தந்துள்ளது. முன்னதாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், தற்போது நீதிமன்றம் எந்தெந்த வரி உத்தரவுகளை எல்லாம் ரத்து செய்து இருக்கிறதோ அதற்கு மாற்றாக நான் வரிவிதிப்பேன் , எங்களிடம் மாற்று வழிமுறை இருக்கிறது என கூறியிருக்கிறார். தொடர்ந்து வரிகள் மூலம் அமெரிக்காவிற்கு வருமானம் வந்து கொண்டே இருக்கும் என தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் மாற்றம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, இந்தியாவுடன் ஒப்பந்தம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என கூறியிருக்கிறார். அவர்கள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தி விட்டார்கள் எனவே இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என கூறியுள்ளார். இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் சிறப்பானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

















