
புதுடெல்லி: அக்டோபர்14-
உ.பி.யில் குற்றச்செயல்கள் அதிகம் நிகழ்கின்றன. இங்கு பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் குற்றவாளிகளுக்கு எதிராக என்கவுன்ட்டர் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தற்போது ‘ஆபரேஷன் லங்கடா’ எனும் பெயரில் முக்கிய குற்றவாளிகளை பிடிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 10 நாட்களில் நடைபெற்ற 20 என்கவுன்ட்டர்களில் 10 முக்கிய குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.கொல்லப்பட்டவர் பட்டியலில் ரூ.2.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட வினீத் பாட்டி, ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட இப்தகார், இம்ரான், அர்ஷத், நயீம் ஆகியோரும் உள்ளனர்.உ.பி.யின் கவுசாம்பி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு முன் புதுமணப் பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தில் 48 மணி நேரத்தில் அவரது காதலன் பால்வீர் காலில் சுடப்பட்டு கைது செய்யப்பட்டார்.ராபர்ட்ஸ்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதி ஒரு பெண்ணிடம் கொள்ளையடித்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மறுநாள் இந்த மூவரும் என்கவுன்ட்டரில் கைது செய்யப்பட்டனர்.அவுரையாவில் ரூ.25,000 வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த ராஜ்னேஷ் கைது செய்யப்பட்டார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
பரேலியில் ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட காஸ்கஞ்சின் இப்தகார், கடந்த 8-ம் தேதி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இவரது மரணம் குற்றவாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. என்கவுன்ட்டர் படங்கள் வெளியான பிறகு, சஹாரன்பூர் துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்ட பிரசாந்த் குமார் காவல் நிலையம் வந்து சரண் அடைந்தார். கடந்த 8 ஆண்டுகளில் உ.பி. காவல்துறை 14,973 என்கவுன்ட்டர்களை நடத்தியுள்ளது. இதில் 239 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.