ஊழியர்களுக்கு சாதகமான புதிய தொழிலாளர் சட்டங்கள்

டெல்லி, டிச. 1- நம் நாட்டில் பல ஆண்டுகளாக, மிக பழமையான தொழிலாளர் சட்டங்களே அமலில் இருந்தன. தற்போதைய தொழில் சூழல்களுக்கு ஏற்ற வகையில், தொழிலாளர் சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 21ம் தேதி நாடு முழுதும் புதிய தொழிலாளர் சட்டங்களை, மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன் வாயிலாக, 29 தொழிலாளர் சட்டங்கள் சுருக்கப்பட்டு, ‘தொழிலாளர் ஊதிய சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூக பாதுகாப்பு சட்டம் 2020, தொழில்முறை பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிட சூழல் சட்டம் 2020’ என, நான்கு சட்டங்களாக நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த புதிய சட்டங்களில், ‘அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாயமாக நியமன ஆணை வழங்க வேண்டும்; 10 பேருக்கு குறைவாக வேலை செய்யும் நிறுவனங்களுக்கும் ஈ.எஸ்.ஐ., வழங்கி, அதிக அளவிலான தொழிலாளர்களை காப்பீட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்; ஓராண்டில், 30 நாட்கள் மட்டுமே வேலை செய்திருந்தாலும், போனஸ் பெறும் உரிமை, 40 பேருக்கு மேல் பணியாற்றும் தொழிற்சாலைகளில் ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை; அனைத்து ஊழியர்களுக்கும் சரியான நேரத்தில் சம்பளம்’ என்பது போன்ற விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன், ஓராண்டு பணி முடித்தாலே பணிக்கொடை எனப்படும், ‘கிராஜுவிட்டி’ பெறும் உரிமை, நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த மாற்றங்கள் எல்லாம், தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உயர்த்துவதுடன், தொழில் வளர்ச்சி, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க உதவும் என நம்பப்படுகிறது.
மேலும், பெண் தொழிலாளர்கள் பங்களிப்பை அதிகரிக்கவும், அமைப்புசாரா துறையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கு, அனைத்து ஊதிய பலன்களும் கிடைக்கக்கூடிய வகையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும், ‘புதிய தொழிலாளர் சட்டங்களில் இடம் பெற்றுள்ள சில விதிமுறைகள், தொழில் நிறுவனங்கள் ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது மட்டும் இல்லாமல், வேலையில் இருந்து நீக்குவதையும் எளிமையாக்கி இருக்கின்றன’ என, தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.