புதுடெல்லி: டிசம்பர் 17-
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் அமளிக்கு இடையில் புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) அமலுக்கு கொண்டு வந்தது. கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் இந்த திட்டத்தின் பெயரை, ‘விக் ஷித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) (விபி-ஜி ராம்-ஜி)’ என பெயர்மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங் கியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) மாற்றாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று, மகாத்மா காந்தி பெயரில் உள்ள திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு அனுப்பவேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால் கடும் அமளிக்கு இடையில் அமைச்சர் அந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதுகுறித்து சிவராஜ் சிங் சவுகான் கூறும்போது, “மகாத்மா காந்தி எங்கள் இதயங்களில் வாழ்கிறார். மிகவும் ஒடுக்கப்பட்டவர்களின் நலன் தலையாய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பது காந்திஜி மற்றும் பண்டிட்தீன்தயாள் ஆகிய இருவரின் முன்னுரிமையாக இருந்தது. நாங்கள் அவர்களின் கொள்கைகள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். அத்துடன் அவர்களது கொள்கைகளின் அடிப்படையில் பல வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்’’ என்றார்.















