
புதுடெல்லி: டிசம்பர் 2-
ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் நடத்தும் ‘டபிள்யுடிஎப் ஈஸ்’ என்ற வலையொலி (பாட்காஸ்ட்) நிகழ்ச்சியில் டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் கூறியதாவது:
இந்தியாவைச் சேர்ந்த திறமையான மனிதர்களால் அமெரிக்கா மிகப்பெரிய அளவில் பயன் அடைந்துள்ளது. ஆனால் அது இப்போது மாறி வருவதைப் போல தெரிகிறது. உங்களுக்கு தெரியுமா என தெரியாது. ஆனால் என்னுடைய துணைவர் ஷிவோன் ஜிலிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் (அரை இந்தியர்). அவர் கனடாவில் வளர்ந்தார். குழந்தையாக இருந்தபோது அவர் தத்தெடுக்கப்பட்டார்.
இயற்பியல் நோபல் பரிசு வென்ற இந்திய-அமெரிக்கர் சுப்ரமணியன் சந்திரசேகரை கவுரவப்படுத்தும் வகையில், என்னுடைய ஒரு மகனின் நடுப்பெயர் சேகர் என வைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கனடா தந்தைக்கும், இந்திய தாய்க்கும் பிறந்தவர்தான் ஷிவோன் ஜிலிஸ். யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தத்துவ இயலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார்.
எலான் மஸ்கும் ஷிவோனும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2021-ல் ஒரு பெண், ஒரு ஆண் என இரட்டை குழந்தை பிறந்தது. பின்னர் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர். இதில் இரட்டையர்களில் ஆண் குழந்தைக்கு தான் ஸ்ட்ரைடர் சேகர் சிரியஸ் என பெயர் வைத்துள்ளனர்.

















