
பாஸ்டன்: ஜூன் 18-
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஜிலெட் மைதானத்தில் நேற்று ‘ஐ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நார்வே – இராக் அணிகள் மோதின. இதில் நார்வே அணி 4-1 என்ற கோல் கணக்கில் இராக்கை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.29-வது நிமிடத்தில் டேவிட் மோலர் வோல்ஃப் உதவியுடன் பந்தை பெற்ற நட்சத்திர முன்கள வீரர் எர்லிங் ஹாலண்ட் அசாத்தியமாக கோல் அடிக்க நார்வே அணி 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்த 10-வது நிமிடத்தில் இராக் அணி பதிலடி கொடுத்தது. 39-வது நிமிடத்தில் அமீர் அல் அம்மாரி கொடுத்த துல்லியமான கிராஸை பெற்ற இராக்கின் அனுபவ வீரர் ஐமன் உசேன் தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.
ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 43-வது நிமிடத்தில் இராக் தடுப்பாட்ட வீரர்களுக்கும் கோல்கீப்பருக்கும் இடையே ஏற்பட்ட தடுமாற்றத்தைப் பயன்படுத்திக் கொண்ட எர்லிங் ஹாலண்ட், தனது 2-வது கோலை அடித்து நார்வேயை 2-1 என மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.
76-வது நிமிடத்தில் கார்னரில் உதைக்கப்பட்ட பந்தை நார்வே அணியின் பதிலி வீரர் லியோ ஆஸ்டிகார்ட் தலையால் முட்டி கோல் வலைக்குள் திணித்தார். இதனால் நார்வே அணி 3-1 என முன்னிலை பெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் நார்வே அணி 3-1 என முன்னிலையில் இருந்தது. இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 6-வது நிமிடத்தில் இராக் அணியின் ஐமன் உசேன் சுய கோல் அடிக்க நார்வே அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.





















