
புதுடெல்லி, ஆகஸ்ட் 20- உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக் ஷயா சென், அமெரிக்காவின் கேரேட் டானுடன் மோதினார். இதில் லக்ஷயா சென் 21-19, 19-21, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-8, 21-10 என்ற நேர் செட் கணக்கில் இலங்கையின் அபேவிக்ரமாவை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து 21-16, 21-17 என்ற நேர் செட் கணக்கில் கனடாவின் வென் யூ ஜாங்கை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் கால் பதித்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் உன்னதி ஹூடா 21-11, 9-21, 21-23 என்ற செட் கணக்கில் போராடி கனடாவின் மிட்செல்லி லி-யிடம் தோல்வி அடைந்தார். ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஜோடிக்கு முதல் சுற்றில் ‘பை’ வழங்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று 2-வது சுற்றில் ஸ்காட்லாந்தின் அலெக்சாண்டர் டன், ஆடம் பிரிங்கிள் ஜோடியை எதிர்த்து விளையாட இருந்தது. ஆனால் அலெக்சாண்டர் டன்னுக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் இந்த ஜோடி போட்டியில் இருந்து விலகியது. இதனால் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி அடுத்த சுற்றில் நுழைந்தது.
















