
காலே, ஆகஸ்ட் 20- இலங்கை – இந்தியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 167, கே.எல்.ராகுல் 82, துருவ் ஜூரெல் 51 ரன்கள் விளாசினர். அதேவேளையில் இலங்கை அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சோனல் தினுஷா 100, நிரோஷன் திக்வெல்லா 80 ரன்கள் சேர்த்தனர். 178 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 48.5 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 66, தேவ்தத் படிக்கல் 44, கே.எல்.ராகுல் 35 ரன்கள் சேர்த்தனர். 372 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 34 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்தது. நிஷான் மதுஷ்கா பெர்னாண்டோ 6, பசிந்து சூரியபண்டாரா 0, கமிந்து மெண்டிஸ் 2, லகிரு உதரா 16 ரன்களில் நடையை கட்டினர். கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 31, சோனல் தினுஷா 25 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.நேற்று கடைசி நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது. தனது 20-வது அரை சதத்தை கடந்த தனஞ்ஜெயா டி சில்வா 151 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தை ஸ்வீப் ஷாட் விளையாடினார்.
















