எல்கார் பரிஷத் வழக்கில் பேராசிரியர் ஹனி பாபுவுக்கு ஜாமீன்

மும்பை: டிசம்பர் 5- எல்கார் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஹனி பாபுவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை முடியாத நிலையில், ஹனி பாபு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைச் சுட்டிக்காட்டி மும்பை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த 2017 டிசம்பர் 31ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் எல்கர் பரிஷத் என்ற மாநாடு நடைபெற்றது. பீமா- கோரேகானில் போர் வெற்றி நினைவு தினத்தை முன்னிட்டு இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு இடதுசாரி தலைவர்கள் மற்றும் சில எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
எல்கர் பரிஷத் சம்பவம் இந்த மாநாட்டிற்கு மறுநாள், அதாவது 2018 ஜனவரி 1ம் தேதி பீமா- கோரேகானில் போர் வெற்றி நினைவுச்சின்னம் அருகே திடீரென வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், பலர் காயமடைந்தனர். எல்கர் பரிஷத் மாநாட்டில் பேசியவர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகவும் அதுவே கலவரத்திற்குக் காரணம் என்றும் மகாராஷ்டிரா போலீசார் குற்றஞ்சாட்டினர் இந்த வழக்கில் வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மீது உபா உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்படிக் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தான் ஹனி பாபு. ஆங்கில இலக்கியப் பேராசிரியரான பாபு, 2020 ஏப்ரல் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். 5 ஆண்டுகள் விசாரணை இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அதையே காரணமாகச் சொல்லி, மும்பை உயர் நீதிமன்றம் நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கியது.
விசாரணையின்றி நீண்ட காலம் சிறையில் அடைக்கப்படுவது அரசியலமைப்புக்கு எதிரானது எனச் சொல்லி முதலில் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் 2022ல் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், அந்த மனு நிராகரிக்கப்பட்டது. 2017 எல்கார் பரிஷத் நிகழ்வில் வன்முறை பேச்சு மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சதித்திட்டத்தில் ஹனி பாபுவுக்கு தொடர்பு இருப்பதாக என்ஐஏ சொல்லி வந்தது. இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஹனி பாபு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். ஹனி பாபுவுக்கு எதிராக அதற்கு முன்பு எந்தவொரு குற்றப் பின்னணியும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவரது வழக்கறிஞர் யுக் மோகித் சவுத்ரி, விடுவிப்பு மனு கூட மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் பரிசீலனையிலேயே இருப்பதாகவும் வாதிட்டார். விசாரணை நீண்ட காலமாக நடந்து வருவதால் ஹனி பாபு நீண்டகாலமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவே ஜாமீன் வழங்கப் போதுமான காரணம் என்றும் தெரிவித்தார்.. அரசு வாதம் இருப்பினும், அரசுத் தரப்பு வழக்கறிஞர், வெறும் நீண்ட காலச் சிறை வாசம் மட்டுமே ஒருவருக்கு ஜாமீன் வழங்கக் காரணமாக இருக்க முடியாது என வாதிட்டார். மேலும், இந்த வழக்கில் கிடைக்கக்கூடிய அதிகபட்சத் தண்டனைக் காலத்தில் 50%ஐ கூட ஹனி பாபு சிறையில் கழிக்கவில்லை என்றும் வாதிட்டார். இருப்பினும், இந்த வாதத்தை நீதிபதிகள் ஏ.எஸ். காட்கரி, ரஞ்சித்சிங் ஆர். போன்சலே அமர்வு ஏற்கவில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுதிர் தவலே, ரோனா வில்சன் ஆகியோர் நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்ட காரணத்தால் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மும்பை உயர்நீதிமன்றம், ஹனி பாபுவுக்கும் அதே காரணங்கள் பொருந்தும் என குறிப்பிட்டது.. மேலும், இந்த வழக்கில் 9க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ளதையும் அமர்வு சுட்டிக்காட்டியது. விசாரணை முடியாமல் காலவரையற்ற காவலில் விசாரணைக் கைதிகளை வைத்திருக்க முடியாது என்றும் மும்பை ஐகோர்ட் கூறியது.