எல்லையில் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் சீனா

புதுடில்லி: ஜனவரி 6-
லடாக் எல்லையில், சீன ராணுவம் தன் படைகளின் எண்ணிக்கையை கடந்த ஓராண்டில் பாதியாக குறைத்தாலும், எல்லையோரங்களில் நம் நாட்டைவிட, நான்கு மடங்கு வேகத்தில் உட்கட்டமைப்புகளை உருவாக்கி வருவது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய — சீன ராணுவத்துக்கு இடையே கடந்த 2020 மே மாதத்தில் மோதல் ஏற்பட்டது. இதில், நம் ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இருநாட்டு உறவில் விரிசல் விழுந்தது.
இந்நிலையில், ரஷ்யாவின் காசனில் கடந்த ஆண்டு நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில், எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு இருந்த படைகள் பரஸ்பரம் விலக்கிக் கொள்ளப்பட்டன.
இதன்படி, எல்லைப் பகுதியில் படைகளின் எண்ணிக்கையை சீன அரசு கடந்த ஓராண்டில் பாதியாக குறைத்துள்ளதாக, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாக கொண்டு வெளிவரும் ‘தி எகானமிஸ்ட்’ இதழ் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து அந் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2024க்கு பின் இந்தியா – சீனா இடையே பதற்றம் தணிந்துள்ளது. எனினும், தற்போது குளிர்காலம் துவங்கியுள்ளதால் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே திரும்பப் பெறப்பட்ட படைகளைத் தவிர, மற்ற படைகள் ரோந்து பணிகள் மேற்கொண்டு வருகின்றன.
‘ஆப்பரேஷன் சிந்துார்’ நடவடிக்கையின் போது எல்லையில் இருந்த இரண்டு படைப்பிரிவுகளை பாகிஸ்தான் எல்லைக்கு திசைதிருப்பும் அளவுக்கு, சீனா மீது இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது.
இதேபோல், எல்லையில் பதற்றத்தை சீன அரசு தணித்திருந்தாலும், அப்பகுதிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. ஒரே நேரத்தில் சாலைகள், பாலங்கள், கிராமங்கள் மற்றும் ராணுவ உதவியுடன் கட்டுமானத்தை விரைவுபடுத்தியுள்ளது. இந்தியாவை விட நான்கு மடங்கு வேகத்தில் தன் உட்கட்டமைப்பை சீனா கட்டி வருகிறது.