
காபூல்: அக்.13-
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் படையினருக்கு இடையே எல்லையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மோதலில் பாக். வீரர்கள் 58 பேர் உயிரிழந்ததாக தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் நேற்று அறிவித்தார்.
ஆப்கன் தலைநகர் காபூல் மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள சந்தை ஆகியவற்றில் பாகிஸ்தான் கடந்த வாரம் குண்டு வீசியது. ஆனால் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தானில் செயல்படும் தெக்ரிக் இ-தலிபான்களுக்கு (டிடிபி) ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுப்பதையும், ஆயுதப் பயிற்சி அளிப்பதையும் தலிபான் அரசு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று மட்டும் பாகிஸ்தான் அறிக்கை வெளியிட்டது.
கடந்த 2021-ம் ஆண்டு முதல் தெக்ரிக் இ-தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர் என பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
இந்நிலையில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, பாகிஸ்தான் எல்லை மீது ஆப்கன் படையினர் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தினர்.
பஹ்ரம்சா மாவட்டத்தின் துரந்த் எல்லையில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், அப்போது பாகிஸ்தான் ராணுவத்தின் 3 நிலைகளை ஆப்கன் படையினர் கைப்பற்றியதாகவும் ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் பகுதி செய்தித் தொடர்பாளர் மவுலி முகமது காசிம் ரியாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித் கூறுகையில், ‘‘ஆப்கன் மற்றும் பாகிஸ்தான் படையினர் இடையே நடைபெற்ற சண்டையில் பாக். வீரர்கள் 58 பேர் உயிரிழந்தனர். ஆப்கன் தரப்பில் 9 வீரர்கள் உயிரிழந்தனர், 16 பேர் காயம் அடைந்தனர்’’ என்றார்.
எச்சரிக்கை: ஆப்கன் அமைச்சர் அமிர் கான் முட்டாகி டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தான் எல்லையில் சுமார் 4 மணி நேரம் ஆப்கன் படைகள் நடத்திய பதிலடி தாக்குதல் மூலம் எங்கள் நோக்கம் நிறைவேறியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள சிலர் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். பாகிஸ்தான் மக்களும், பாகிஸ்தான் ஆட்சியாளர்களும் ஆப்கானிஸ்தானுடன் அமைதியான உறவை விரும்புகின்றனர். அதை அங்குள்ள சிலர் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். கத்தாரும், சவுதி அரேபியாவும் கேட்டுக் கொண்டதால், நாங்கள் தாக்குதலை நிறுத்தினோம். அனைத்து பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். பாகிஸ்தானுடன் அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தால், எங்களுக்கு வேறு வழிகள் உள்ளன. இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்தார்.