எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள் வழங்கப்படும்

புதுடில்லி, ஜூன் 27- வரும் 2027ம் ஆண்டிற்குள், மீதமுள்ள இரண்டு எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.ரஷ்யா வடிவமைத்துள்ள எஸ்-400 அதிநவீன வான் பாதுகாப்பு கவச வாகனம், இந்தியாவில் சுதர்சன சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வாகனம் 600 கி.மீ., தொலைவில் இருந்து வரும் ஏவுகணைகளையும் கண்காணிக்கும். அதேபோல் 400 கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை இடைமறித்து அழிக்கவும் முடியும். உலக நாடுகள் வைத்துள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளில் மிகவும் துல்லியமாக செயல்படக்கூடியது இந்த எஸ் 400 அமைப்பு. இதன் செயல்பாடுகளை ஆராய்ந்த இந்திய ராணுவம் 2018ம் ஆண்டில், ஐந்து எண்ணிக்கையில் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மொத்த மதிப்பு 40 ஆயிரம் கோடி ரூபாய். முழுத் தொகையையும் இந்தியா செலுத்தி விட்டது. ஆனால் இதுவரை ரஷ்யா 3 எண்ணிக்கையில் மட்டுமே எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கியுள்ளது.