
சென்னை: ஜூன் 26-
முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள், தமிழக அரசியல் களத்தில் பெரும் சூறாவளியைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, வார இறுதி விடுமுறை நாட்களைக் கணக்கிட்டு எ.வ.வேலுவை உடனடியாகக் கைது செய்ய வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் திமுக வட்டாரத்தை உலுக்கியுள்ளது. ஆனால், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) இந்த அதிரடி ஆட்டம் இதோடு நின்றுவிடப் போவதில்லை என்றும், இதன் அடுத்த அலை மிக வீரியமாக இருக்கப்போகிறது என்றும் கோட்டை வட்டாரத் தகவல்கள் கசிகின்றன.
தமிழக முதல்வர் த.வெ.க தலைவர் முதல்வர் விஜய்யின் அடுத்த இலக்கு, திமுகவின் மிக முக்கியத் தூணாகவும், முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மிக நெருங்கிய வட்டாரம் மற்றும் அவரது நண்பர்கள் தான் என்று அரசியல் விமர்சகர்கள் மற்றும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோட்டையில் இருந்து கசியும் நம்பத்தகுந்த தகவல்களின்படி, உதயநிதி ஸ்டாலினுடன் மிக நெருக்கமாகப் பழகிய, அவரது தொழில் மற்றும் தனிப்பட்ட வட்டாரத்தைச் சேர்ந்த முக்கிய நபர்களின் முழு விவரங்களையும், கடந்த கால செயல்பாடுகளையும் தற்போதைய அரசு மிகத் தீவிரமாகத் திரட்டி வருகிறது. உதயநிதியின் நெருங்கிய நண்பர்கள், கடந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறைகளில் பின்னணியில் இருந்து முக்கிய முடிவுகளை எடுத்ததாகக் கூறப்படும் ஆலோசகர்கள் மற்றும் திரைத்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்ந்த முக்கியப் புள்ளிகள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ‘டாப் சீக்ரெட்’ பட்டியலை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தயார் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை போன்றவற்றில் நடைபெற்ற டெண்டர்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் உதயநிதிக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்குக் கிடைத்த சலுகைகள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மாநிலப் புலனாய்வு அமைப்புகள் ஏற்கனவே துடைப்பம் கொண்டு தூசி தட்ட ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.
ஆளுங்கட்சித் தரப்பில் விசாரித்தபோது, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்று திட்டவட்டமாக மறுக்கிறார்கள். “கடந்த ஆட்சியில் மக்கள் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியவர்கள், அதிகார பலத்தைக் கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். எ.வ.வேலுவின் மீதான நடவடிக்கை ஒரு ஆரம்பம் தான். அடுத்தடுத்து முறைகேடுகளில் தொடர்புடைய அனைவரின் முகமூடிகளும் கிழிக்கப்படும்,” என்று டிவிகே தரப்பு மிக உறுதியாகத் தெரிவிக்கிறது. குறிப்பாக, உதயநிதி ஸ்டாலினின் நண்பர்கள் வசம் இருந்த சில முக்கியத் தொழில்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் கடந்த 3 ஆண்டுகளில் அவர்கள் வாங்கிய சொத்து விவரங்கள் குறித்த ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சேகரித்து வருவதாகத் தெரிகிறது. எ.வ.வேலுவின் மீதான நடவடிக்கை முடிவுக்கு வந்ததும், அடுத்த சில வாரங்களில் உதயநிதியின் இந்த ‘இன்னர் சர்க்கிள்’ மீதான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் பாயக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


















