
டெல்லி : பிப்ரவரி 21-
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலைக் குறைக்கவும், பயண நேரம் மற்றும் எரிபொருளைச் சேமிக்கவும் ஃபாஸ்டேக் கட்டண முறையை இந்திய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிமுகம் செய்தது. இந்த நிலையில் பாஸ்டேக் மற்றும் யுபிஐ குறித்து ஒரு முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளிலும் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலும் நிறுத்துவது குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது தேசிய நெடுஞ்சாலைகளில் முழுமையான டிஜிட்டல் கட்டணத்தை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே அனைத்து சுங்கச்சாவடிகளிலும் FASTag அல்லது UPI (கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்றவை) மூலம் மட்டுமே இனி பேமெண்ட் மேற்கொள்ள முடியும். குறிப்பாக இதன் மூலம், சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைக்க முடியும். சுங்க பரிவர்த்தனைகளில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வந்து, பயனர்களின் பயணத்தை எளிதாக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் 98 சதவீதம் வாகனங்கள் ஃபாஸ்டேக் பயன்படுத்தி வருகின்றன. எனவே இந்த மாற்றம் பெரும்பாலானோருக்கு சிரமமாக இருக்காது. குறிப்பாக ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் ரொக்கமாகச் சுங்கக் கட்டணம் செலுத்தினால், வழக்கமான கட்டணத்தை விட இரண்டு மடங்கும் செலுத்தும் நிலை உள்ளது. அதுவே யுபிஐ அல்லது பிற டிஜிட்டல் முறைகள் மூலம் பணம் செலுத்தினால் வழக்கமான கட்டணத்தில் 1.25 மடங்கு மட்டுமே வசூலிக்கப்படும்
குறிப்பாக ரொக்கப் பணத்தை விட டிஜிட்டல் முறைகளுக்குக் குறைவான கட்டணம் வசூலிப்பதன் மூலம் மக்களை ஃபாஸ்டேக் அல்லது யுபிஐ போன்ற டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களுக்கு மாற தூண்டுவது அரசின் முக்கிய திட்டமாகும். ஆகவே வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் ஏப்ரல் முதல் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்குச் சுங்கச்சாவடிகளில் அனுமதி இல்லை, கேஷ் கொடுக்க முடியாது, ஒன்று டேக் பயன்படுத்த வேண்டும் அல்லது அபராதத்தோடு யுபிஐ வழியாகச் செலுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஃபாஸ்டேக் ஆனது மக்களின் பணத்தைச் சேமிப்பதோடு மட்டுமின்றி அவர்களின் பயணத்தை மேலும் வசதியாகும், அழுத்தமின்றியும் மாற்றுகிறது. அதுவும் இந்தியா முழுவதும் உள்ள சுமார் 1,159 சுங்கச்சாவடிகளில் இது செல்லுபடியாகும்.
மேலும் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ்களை பயன்படுத்தி தமிழகம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுங்கச்சாவடிகளில் அதிக எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக NHAI தெரிவித்தது. அதுவும் இந்த வருடாந்திர சுங்க பாஸ் என்பது ஒரு ப்ரிபெய்ட் வசதியாகும். குறிப்பாக இதன் மூலம் தனியார் வாகன ஓட்டிகள் ஒருமுறை கட்டணம் செலுத்தி, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வேகளில் இருக்கும் 200 சுங்கச்சாவடிகள் வரை இலவசமாகப் பயணிக்கலாம். ஒவ்வொரு பாஸின் விலை ரூ.3000 ஆகும். இந்த வசதி கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்குக் கிடைக்கும்.

















