
புதுடெல்லி, பிப். 17- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 9 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான ஆர்யன்ஷ் சர்மா 0 ரன்களில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் பந்திலும், கேப்டன் முகமது வசீம் 10 ரன்களில் முஜீப் உர் ரஹ்மான் பந்திலும் நடையை கட்டினர். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த அலிஷான் ஷராஃபு, சோஹைப் கான் ஜோடி சீரராக ரன்கள் சேர்த்தது. 84 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை முஜீப் உர் ரஹ்மான் பிரித்தார். அலிஷான் ஷராஃபு 31 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் முஜீப் உர் ரஹ்மான் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஐக்கிய அரபு அமீரகம் 11.2 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்திருந்தது.
இதன் பின்னர் அந்த அணி ஆட்டம் கண்டது. சையது ஹைதர் 13, ஹர்ஷித் கவுசிக் 0 ரன்களில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் பந்தில் வெளியேறினர். முகமது அர்ஃபான் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரஷித் கான் பந்தில் ‘ஹிட்விக்கெட்’ முறையில் ஆட்டமிழந்தார். தனது 2-வது அரை சதத்தை கடந்த சோஹைப் கான் 48 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் பந்தில் வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து ஹைதர் அலி 13, ஜூனைத் சித்திக் 3 ரன்களில் ரன் அவுட் ஆனார்கள். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 4 ஓவர்களை வீசி 15 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். முஜீப் உர் ரஹ்மான் 2, ரஷித் கான் ஒரு விக்கெட் கைப்பற்றினர். 161 ரன்கள் இலக்குடன் பேட் செய்த செய்த ஆப்கானிஸ்தான் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


















