
குமுளி: அக். 29-
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கான விபத்துக் காப்பீடு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக கடந்த ஆண்டு விபத்து காப்பீ’ட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஆனால், பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் ஐயப்ப பக்தர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.
தற்போது, இதன் எல்லை வரம்பு கேரள மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கூறியதாவது: கேரள மாநிலத்தில் எங்கு விபத்து நடந்தாலும், சம்பந்தப்பட்ட பக்தர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும்.
மேலும், இறந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல மாநிலத்துக்குள் ரூ.30 ஆயிரமும், வெளிமாநில பக்தர்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் வழங்கப்படும். இதேபோல, சந்நிதானத்துக்கு மலை ஏறிச்செல்லும்போது உயிரிழந்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும். இந்த காப்பீட்டு நிதிக்காக ஆன்லைன் தரிசன முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் ரூ.5 பெறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.















