ஒரு லட்சம் உயிர்களை பலி கொண்ட கலிங்கத்து போரும், அசோகரும்

பாட்னா: ஆகஸ்ட் 18 பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே அம்மாநிலம் கவனம் பெற்றிருக்கிறது. அரசியலை தாண்டி, பீகாரின் வரலாறு உள்ளிட்ட விஷயங்களை ‘ஒன் இந்தியா தமிழ்’ தொகுத்து வழங்கி வருகிறது. இந்த தொகுப்பில் இதற்கு முன்னர் பீகாரில் மௌரிய பேரரசு தோற்றம், சந்திரகுப்த மௌரியர் மரணம் பற்றி பேசியிருந்தோம். இன்று, மௌரிய பேரரசர் அசோகர் குறித்தும், அசோகரின் கலிங்கத்து போர் குறித்தும் பார்ப்போம். இந்தியாவின் முதல் பேரரசான மௌரிய பேரரசு காலத்தில் பௌத்தம் செழித்து வளர்ந்தது. இந்த பேரரசை உருவாக்க முக்கிய காரணமாக இருந்த சாணக்கியர் வேத மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர் ஆட்சியில் வளர்ந்தது என்னவோ பௌத்தம்தான். குறிப்பாக அசோகர் காலத்தில் பௌத்தம் செழித்து வளர்ந்தது. இதற்கு காரணம் கலிங்கத்து போர்தான்.
மௌரிய பேரரசின் முதல் மன்னனான சந்திரகுப்த மௌரியருக்கு பின்னர் அவரது மகன் பிந்துசாரர் (கி.மு. 273-297) ஆட்சிக்கு வந்தார். ஆனால் இவரால் தனது தந்தையை போல பெரிய அளவில் பெயர் எடுக்க முடியவில்லை. எனவே இவரை பற்றி பெரியதாக குறிப்புகள் ஏதும் இல்லை. ஆனால் இவருக்கு பின்னர் வந்த அசோகர் இந்தியாவின் மிகப்பெரிய அடையாளமாக உருவெடுத்தார். இவர் நடத்திய கலிங்கத்து போர் இன்றும் வரலாற்று ஆசிரியர்களால் பெரும் கவனம் பெற்றிருக்கிறது. கலிங்கத்து போர் ஒடிசா மாநிலத்தில் உள்ள தய நதிக்கு அருகில், தௌலி மலைகளில் இந்த கலிங்கத்து போர் நடந்தது. கலிங்க நாட்டு மன்னனுக்கும் அசோக பேரரசருக்கும் இடையில் இந்த போர் ஏற்பட்டது. தோல்வி யாருக்கு? இந்த போரில் ஒரு லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஒன்றரை லட்சம் வீரர்கள் நாடு கடத்தப்பட்டனர். இதையெல்லாம் பார்த்த அசோகர் மனம் வெறுத்தார். போர், உயிர் பலி, ரத்த வாடை எல்லாவற்றையும் அவர் வெறுத்தார். அரசனுக்கு போர் புரிவதே அறம் என்று போதிக்கப்பட்ட காலம் அது. எனவேதான் நிலப்பரப்புக்காக ஒருவரை ஒருவர் அடித்து கொன்றுக்கொண்டனர். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு இருக்கத்தானே செய்யும்? அப்படித்தான் இந்த போர்களுக்கும் ஒரு முடிவு வந்தது.