
ஓசூர்: பிப்ரவரி 25-
ஓசூரில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை எடுப்பது தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில் அரசு ஊழியர் ஒருவர் மீது காரை ஏற்றிக் கொலை செய்ததாக குற்றம் சாட்டி கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகியின் மகன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மூவர் மீதும் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் திமுக மீது எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை அழிக்க முயற்சி நடப்பதாகவும் அரசியல் தலைவர்களால் புகார்கள் கூறப்பட்டன.ஆனால் சிசிடிவி காட்சிகள் அனைத்தும் நீதிமன்றத்தில் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்று ஓசூர் காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
‘திமுக நிர்வாகியின் மகன் என்பதற்காக அவர்களைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை’ என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பிபிசியிடம் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழிலாளர் நலத்துறையில் உதவி தொழிலாளர் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சிவமூர்த்தி. இவருடைய வீடு, ஓசூர் ராயக்கோட்டை அன்னை அரவிந்த் நகரில் உள்ளது.
கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதியன்று மாலையில் இவருடைய வீட்டின் முன்பாக உள்ள சாலையில் வாகனத்தை நிறுத்தியது தொடர்பாக இவருடைய குடும்பத்தினருக்கும், காரில் வந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது காரில் வந்தவர்கள், வேகமாக இவர்கள் மீது காரை மோதியதில் சிவமூர்த்தி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை பிபிசியிடம் பகிர்ந்த தகவலின்படி, அன்று மாலை 6 மணியளவில் சிவமூர்த்தி வீடு அமைந்துள்ள வீதியில் ஆதித்யா (வயது 20), ரித்திக் குமார் (வயது 20) ஹரீஷ் (வயது 19) ஆகிய மூன்று பேரும் ஒரு காரில் வந்துள்ளனர். அப்போது சிவமூர்த்தியின் வீட்டிற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை இடித்து சேதப்படுத்தியுள்ளனர்.















