
லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூன் 30- பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சோபி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் கனடா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. 22-வது நிமிடத்தில் கனடா அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஸ்டீபன் யுஸ்டாக்கியோ ஃபிரீ-கிக் மூலம் உதைத்த பந்து 6 அடி தூர பாக்ஸ் பகுதிக்குள் எதிரணியால் மார்க்கிங் செய்யப்படாமல் தனியாக நின்ற டெரெக் கார்னிலியஸுக்கு சென்றது. அவர், தலையால் முட்டிய பந்து தரையில் பட்டு நேராக கோல்கீப்பர் ரான்வென் வில்லியம்ஸிடம் தஞ்சம் அடைந்தது. முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் செட்-பீஸ்கள் மூலம் கனடாவுக்குச் சிறந்த வாய்ப்புகள் கிடைத்தன. அடுத்தடுத்து இலக்கை நோக்கி வந்த பந்துகளில் ஒன்றைத் தென் ஆப்பிரிக்காவின் மோடிபா தடுத்து வெளியேற்றினார். இதன் பின்னர் கனடா அணியின் பொம்பிம்பிட்டோ தலையால் முட்டிய பந்தையும், அதைத் தொடர்ந்து புக்கானன் மிக அருகிலிருந்து அடித்த ஷாட்டையும் கோல்கீப்பர் ரான்வென் வில்லியம்ஸ் அபாரமாகத் தடுத்தார். 45+2-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் வீரர் குலிசோ முடாவ், ரிச்சி லாரியாவை ஃபவுல் செய்ததாக கனடாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் விஏஆர் தொழில்நுட்பத்தின் மூலம் அந்த முடிவு ரத்து செய்யப்பட்டது. முதல் பாதியில் கனடாவின் இடைவிடாத தாக்குதல்களைச் சமாளித்த தென் ஆப்பிரிக்க அணி ஆட்டத்தை 0-0 என சமநிலையில் வைத்திருந்தது. முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியும் வாய்ப்புகளை கோல்களாக மாற்ற முடியாததால் கனடா ஏமாற்றமடைந்தது. 2-வது பாதியிலும் இதே நிலைதான் நீடித்தது. கனடா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி, அழுத்தத்தை அதிகரித்தது. 66-வது நிமிடத்தில் அந்த அணிக்கு கோல் அடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.





















