
இஸ்லாமாபாத், நவ. 13- பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தீவிர பாதுகாப்பு அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது ஒரு கண்துடைப்பு நாடகமாக, வெறும் ஒரு நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், நாடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்த வீரர்களை, “சுற்றுப்பயணத்தைத் தொடர வேண்டும், மீறினால் விசாரணைகளை சந்திக்க நேரிடும்” என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) உயிர் பயத்தில் இருக்கும் தங்கள் நாட்டு வீரர்களை எச்சரித்து இருக்கிறது. இலங்கை அணி தங்கியிருக்கும் இஸ்லாமாபாத் நகரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) போட்டி அட்டவணையில் மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை நடைபெறவிருந்த 2-வது ஒருநாள் போட்டி, ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை நடைபெறும். நவம்பர் 15-ம் தேதி நடைபெறவிருந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, நவம்பர் 16-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்படி ஒரு நாள் தள்ளி வைப்பதால் என்ன பெரிய மாற்றம் நடந்து விடும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இஸ்லாமாபாத் தாக்குதலுக்குப் பிறகு, இலங்கை அணியைச் சேர்ந்த சுமார் 8 வீரர்கள், தங்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, உடனடியாக நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று அணி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தத் தகவலை அறிந்த இலங்கை கிரிக்கெட் வாரியம், வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என உறுதியளித்ததோடு, அவர்களை மிரட்டும் தொனியில் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.


















