
சிட்னி, நவ, 11- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், கடைசிப் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தைக் கொண்டாடுவதில் அர்த்தமில்லை என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்பீரின் இந்தக் கருத்து, கோலி மற்றும் ரோஹித்தின் ரசிகர்களிடையே கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. சுப்மன் கில் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் இழந்தது. அதே சமயம், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி ஆறுதல் அடைந்தது. ஒருநாள் தொடரில் நடந்தது என்ன? ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஓய்வில் இருந்த சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, இந்த ஒருநாள் தொடரின் மூலம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பினர். முதல் ஒருநாள் போட்டியில், விராட் கோலி டக் அவுட் ஆக, ரோஹித் சர்மாவும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டியிலும் கோலி டக் அவுட் ஆனார், இருப்பினும் ரோஹித் 73 ரன்கள் குவித்தார். ஆனால், இந்தப் போட்டியிலும் இந்தியா நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டது. இதனால், முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றியை எதிர்நோக்கிக் களமிறங்கியது. இந்தப் போட்டியில், ரோஹித் சர்மா தனது 50வது சர்வதேச சதத்தை விளாசி 121 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி, முதல் இரண்டு போட்டிகளில் ஏமாற்றம் அளித்திருந்தாலும், இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் குவித்தார்.
இந்த ஜோடியின் பிரிக்க முடியாத 168 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கம்பீரின் சர்ச்சை கருத்து தொடரை இழந்தாலும், கடைசிப் போட்டியில் ரோஹித் மற்றும் கோலியின் ஆட்டத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரிதும் கொண்டாடினர்.


















