காப்பீடு இன்றி இயங்கும் 50 சதவீத வாகனங்கள்

புதுடில்லி, நவ. 1- நாட்டில் இயங்கும், 50 சதவீத வாகனங்கள் உரிய காப்பீடு இன்றி இயங்குவதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், அபராதம் செலுத்தாத வாகனங்களை போல் இவற்றையும் பறிமுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
தெலுங்கானாவைச் சேர்ந்தவர் துங்கலா தனலட்சுமி. இவரது கணவர் கடந்த 1996ல் காரில் பயணித்த போது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார். அந்த கார், நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டிருந்தது. விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு தெலுங்கானா உயர் நீதிமன்றம், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, காப்பீடு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதிகள் சஞ்சய் கரோல், பிரசாந்த் குமார் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இழப்பீடு கோரிய குடும்பத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜாய் பாசு, “நாட்டில் இயங்கும் வாகனங்களில், 50 சதவீதத்திற்கு மேல் உரிய காப்பீடு இன்றி உள்ளன. ‘’காப்பீடு எடுத்தவர்களுக்கு நிறுவனங்கள் குழப்பமான விதிகளை காரணம் காட்டி இழப்பீட்டை நிராகரிக்கின்றன,” என்றார்.