
புதுடெல்லி, டிச. 13- இந்திய காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவை அறிக்கையின்படி, காப்பீட்டு துறையில் முதலீட்டை அதிகரிக்கவும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை துரிதப்படுத்தவும், வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் காப்பீட்டு சட்டங்கள் (திருத்த) மசோதா 2025 உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய பட்டியலிடப்பட்ட 13 சட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஆண்டு பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய தலைமுறை நிதித் துறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை தற்போதுள்ள 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தும் திட்டத்தை முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.11,718 கோடி: 2027-ல் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்துக்காக ரூ.11,718 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பும், 2027 பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளன’’ என்றார். இவைதவிர, அணுசக்தி மசோதாவின் கீழ் அணுசக்தி துறையில் தனியார் பங்கேற்புக்கும் அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
















