காமெடி நடிகரின் உணவகத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

புதுடில்லி: அக்டோபர் 17-
கனடாவில் காமெடி நடிகருக்கு சொந்தமான உணவகத்தின் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இது கடந்த 4 மாதங்களில் நடந்த மூன்றாவது தாக்குதலாகும்.
கபில் சர்மா, ஹிந்தி நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர். தனது நிகழ்ச்சிகளான ‘தி கிரேட் இந்தியன் லாப்டர் சேலஞ்ச்’ மற்றும் ‘தி கபில் சர்மா ஷோ’ மூலம் மிகவும் பிரபலமானவர்.
பஞ்சாபில் பிறந்து வளர்ந்த அவருக்கு கனடாவின் சர்ரேயில் சொந்தமாக கப்ஸ் கபே என்ற உணவகம் உள்ளது. இங்கு கடந்த நான்கு மாதங்களில் மூன்றாம் முறையாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இந்த சம்பவம் இங்குள்ள வீடியோவில் பதிவாகி உள்ளது.
முதல் துப்பாக்கிச்சூடு ஜூலை 10ம் தேதியும், 2வது துப்பாக்கிச்சூடு ஆகஸ்ட் 7ம் தேதியும் நடந்த நிலையில் தற்போது 3வதாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், சர்வதேச குற்றவாளியான லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலால் நடத்தப்பட்டதாக கூறி, குல்வீர் சித்து, கோல்டி தில்லான் என்ற இருவர், சமூக ஊடகப் பதிவில் பொறுப்பேற்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக சர்ரே போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சாட்சிகளை விசாரித்து வருகின்றனர்.