
சென்னை, டிச. 2- 14-வது ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 4-வது நாளான நேற்று மதுரையில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி, அயர்லாந்துடன் மோதியது. இதில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் ஜோனாஸ் ஜெர்சம் 2 கோல்கள் (4 மற்றும் 50-வது நிமிடங்கள்) அடித்து அசத்தினார். இந்த இரு கோல்களையும் அவர், பீல்டு கோலாக அடித்திருந்தார். கேப்டன் பால் கிளாண்டர் (34-வது நிமிடம், பெனால்டி கார்னர்), லூக்காஸ் கோஸல் (52-வது நிமிடம், பெனால்டி ஸ்டிரோக்),
கிறிஸ்டியன் பிரான்ஸ் (53-வது நிமிடம், பெனால்டி கார்னர்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஜெர்மனி அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 4-0 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் கனடாவை 7-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியிருந்தது. லீக் சுற்றின் முடிவில் ஜெர்மனி அணி தனது பிரிவில் 3 வெற்றிகளுடன் 9 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – கனடா அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா 9-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் ஜெய்டன் ப்ரூக்கர் 4 கோல்கள் (8, 14, 36 மற்றும் 50-வது நிமிடங்கள்) அடித்து அசத்தினார். பிரெட் ஹார்ன் (22-வது நிமிடம்), சியான் மார்ட் (25-வது நிமிடம்), கேப்டன் டேனியல் நியூஹாஃப் (38-வது நிமிடம்), ராஸ் மோன்ட்கோமெரி (60-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள தென் ஆப்பிரிக்க அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.



















