வாஷிங்டன் ஜன. 22-
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு $ட்ரம்ப், உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு கடுமையாக சரிந்தது.
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு மளமளவென உயர்ந்தது. கிரிப்டோ கரன்சிகளை ஊக்குவிக்கும் கொள்கை முடிவுகளை ட்ரம்ப் எடுப்பார் என்ற நம்பிக்கைதான் இந்த உயர்வுக்குக் காரணம்.
இந்நிலையில், ட்ரம்ப் நேற்று முன்தினம் அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, பல்வேறு கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு வேகமாக உயர்ந்தது. உலகின் மிகப்பெரிய கரன்சியான பிட்காயின் 1,09,071 டாலர் என்ற புதிய உச்சத்தை தொட்டது.
ஆனால், இந்த உயர்வு நாள் முழுவதும் நீடிக்கவில்லை. அதிபராக பதிவியேற்றுக் கொண்ட ட்ரம்ப், பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், கிரிப்டோகரன்சிகள் குறித்த உத்தரவு எதுவும் இடம்பெறவில்லை. இதனால் அவற்றின் மதிப்பு சரிந்தது. பிட்காயின் மதிப்பு 1,01,705 டாலராக சரிந்தது. இதுபோல, ட்ரம்ப் பெயரில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட $ட்ரம்ப் காயின் 74.59 டாலர் என்ற உச்சத்தை எட்டி, வர்த்தகத்தின் இடையே 50% சரிந்து 34.4 டாலரானது.