கிரெட்டா தன்பெர்க் படகை இடைமறித்த இஸ்ரேல் – நடந்தது என்ன?

0பார்சிலோனா. அக். 2- காசாவுக்கு நிவாரண உதவிப் பொருட்களுடன் ஐரோப்பாவில் இருந்து வந்த படகுகளை நடுக்கடலில் இஸ்ரேல் இடைமறித்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் இந்தப் படகு பயணத்தில் இருந்தனர். பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவி பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து 50 படகுகளில் சுமார் 500 செயற்பாட்டர்கள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பயணம் மேற்கொண்டனர். இந்தப் படகுகளில் சில புதன்கிழமை இரவு பாலஸ்தீன பிரதேசத்தை அடைந்தது. அப்போது அதனை இஸ்ரேல் கடற்படையினர் இடைமறித்துள்ளனர்.
இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் பயணித்த படகும் அடங்கும். இந்தப் படகு பயணத்தில் உள்ள சிரியஸ், அல்மா, அடாரா படகுகள் காசா கடற்கரையை நெருங்க சுமார் 80 மைல்கள் தொலைவு இருந்த நிலையில் இஸ்ரேல் கடற்படையினர் படகுகளை இடைமறித்துள்ளனர்.
அதை படகுகளில் பயணித்தவர்கள் சமூக வலைதள பதிவுகளில் பகிர்ந்து உறுதி செய்துள்ளனர்.
அப்போது ‘பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்’ என அவர்கள் முழங்கினர். ஏற்கெனவே இதே போல கடந்த ஜூன் மாதம் நிவாரண பொருட்களுடன் காசா நோக்கி வந்த படகுகளுக்கு இஸ்ரேல் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது. “சுமார் 12-க்கும் மேற்பட்ட படகுகளில் வந்த இஸ்ரேல் கடற்படையினர், பாலஸ்தீன கடல் பரப்பை நெருங்கிய எங்கள் படகுகளை இடைமறித்தனர்.
நாங்கள் பயணித்த படகுகளின் இயக்கத்தை நிறுத்துமாறு அவர்கள் தெரிவித்தனர். அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை எங்களை காத்திருக்குமாறு கூறியுள்ளனர்.
இல்லையெனில் எங்களது படகுகள் கைப்பற்றபடும் என கூறியுள்ளனர். மேலும், அதற்கான விளைவுகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என தெரிவித்துள்ளனர்” என்று காசாவுக்கு உதவு பொருட்களுடன் படகில் சென்ற அமெரிக்கர் கிரேக் ஸ்டாகர் தெரிவித்துள்ளார். இதை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கிரெட்டா தன்பெர்க் மற்றும் அவரது நண்பர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறியுள்ளார். அந்தப் பதிவில் படகின் மேல்புறத்தில் கிரெட்டா தன்பெர்க் அமர்ந்துள்ளார். இந்த பயணத்தில் நெல்சன் மண்டேலாவின் பேரனும் பயணித்துள்ளார். அவர்களுடன் ஐரோப்பியாவை சேர்ந்த செயற்பாட்டாளர்களும் உள்ளனர். சிவப்பு நிற லைஃப்-ஜாக்கெட்டை படகில் பயணித்த அனைவரும் அணிந்துள்ளனர்.