
காந்திநகர்: ஜனவரி 5-
குஜராத்தில் வேகமாக பரவி வரும் ‘டைபாய்டு’ காய்ச்சலால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அசுத்தமான குடிநீரை பருகியதே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. நாட்டிலேயே துாய்மையான நகரங்களில் பட்டியலில் குஜராத்தின் சூரத் நகரம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
இந்த சூழலில், அம்மாநில தலைநகரான காந்திநகரில், அசுத்தமான குடிநீரால் பலருக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க 22 பேர் கொண்ட டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நிலைமையை கண்காணிக்க மாவட்ட துணை கலெக்டருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது கடந்த ஐந்து நாட்களில், டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு 50 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
















