குஜராத்தில் மோடிவளர்ச்சி திட்டங்கள் தொடக்கம்

காந்திநகர்: ஆக. 25-
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதற்காக இன்று மாலை அகமதாபாத் செல்லும் பிரதமர் மோடி நடோராவில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கவுள்ளார். பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கும் அவர், இந்த 2 நாள் சுற்றுப் பயணத்தில் ரூ. 5,477 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு இன்று முதல் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக இன்று மாலை குஜராத் மாநிலம், அகமதாபாத்திற்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார்.
அங்கு நரோடாவில் இருந்து நிகோல் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரமாண்ட ரோடு ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த ரோடு ஷோவில் 1 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளதாக குஜராத் மாநில சுகாதார அமைச்சரும், பாஜக செய்தித் தொடர்பாளருமான ருஷ்கிலேஷ் படேல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பல்வேறு நலத்திட்டப் பணிகளை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 133.42 கோடி மதிப்பில் 1,449 வீடுகள் மற்றும் 130 கடைகளை திறந்து வைக்கவுள்ளார். இந்த இரண்டு நாட்கள் சுற்றுப் பயணத்தில் ரூ. 5,477 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டவுள்ளார்.