சென்னை: டிச. 16- தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் கணக்கு வழக்குகளை அமைப்பு செயலாளர் சி.விஜயபாஸ்கர் வாசித்தார். பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது: கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி இன்றி, 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு பெற்றி பெற்ற கட்சி அதிமுக. அதன் பலத்தை கட்சியினர் தெரிந்து கொள்ள வேண்டும்.
சட்டப்பேரவை கூட்டத்தை ஆண்டுக்கு 100 நாட்கள் கூட்டுவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 113 நாட்கள் மட்டுமே கூட்டியுள்ளனர். மழைக்கால கூட்டத்தொடரை 2 நாட்கள் மட்டுமே நடத்தினர். அதில் எதிர்க்கட்சி தலைவரான எனக்கு 10 நிமிடம் மட்டுமே பேச வாய்ப்பளித்தனர். நான் சட்டப்பேரவையில் பேசும்போதெல்லாம் ஒளிபரப்பை துண்டிக்கின்றனர். நான் சட்டப்பேரவையில் பேசுவதை ஒளிபரப்பி இருந்தால், திமுக ஆட்சி இருந்திருக்காது. ஆளும் திமுக அரசுக்கு அதிமுகவை பார்த்து பயம் வந்துவிட்டது.
தமிழகத்தில் 2026 தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்கள் உள்ளன. அதிமுக ஆட்சி அமைக்க இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு 30 வயதுக்கு உட்பட்டோரை அதிக அளவில் சேர்க்க வேண்டும். திமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். மக்களை பார்க்க திமுகவினர் அஞ்சுகின்றனர். இதை நாம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வரும் ஜனவரி மாத இறுதியில் 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்த ஆட்சியின் அவலங்களை மக்களிடம் தெரிவிக்க இருக்கிறேன். 2026 தேர்தலில் மக்கள் விரோத ஆட்சி அகற்றப்படும். வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டப்படும். அந்த தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும். இவ்வாறு அவர் பேசினார்.